
பி வி ஷங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜி வி பிரகாஷ் குமார், இவானா மற்றும் தீனா நடித்திருக்கும் திரைப்படம் தான் கள்வன்.
நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் தீனா இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் இருவரும்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒரு மலைகிராமத்தில் கதை நகர்கிறது. அருகில் இருக்கும் கிராமத்தில் திருட செல்லும்போது, அங்கு நாயகியாக வரும் இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ்.
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் திட்டம் பற்றி தெரிய வருகிறது. அது என்ன? என்பதையும், அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பதை சொல்வது தான் ‘கள்வன்’.

கெம்பன் என்ற கதாபாத்திரத்திற்காக தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் காட்டவில்லை என்றாலும், கொங்கு தமிழ் பேசி நடித்ததில் ஜி.வி.பிரகாஷ் கெம்பன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். திருடுவது, மது அருந்துவது என்று வழக்கமான ஜி.வி.பிரகாஷாக ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் நடிப்பில் ஜொலிப்பவர், பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் பயணிப்பவர், திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.