‘‘டெவில்’’ திரைப்பட விமர்சனம்!

சென்னை:

எச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் இருவரும் தயாரித்திருக்கும் படம்தான் “டெவில்” இப்படத்தில் விதார்த், பூர்ணா, திரிகுண், ஏ. மிஷ்கின், ரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் இசையமையத்து இருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்ய ஆதித்யா ஜி ஆர். எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

தனது கணவன் விதார்த் செய்த துரோகத்தால் மனம் வெறுத்து போய் தனியாக காரை ஓட்டி கொண்டு வருகிறார் பூர்ணா. பல வித யோசனைகளுடன் காரை ஓட்டிக்கொண்டு வரும் பூர்ணாவுக்கு எதிரில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர் திரிகுண் மீது எதிர்பாராதவிதமக மோதி விடுகிறார். இதனால் கையில் அடிபட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சேர்கிறார். அவரால் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியாததால் தனது காரிலேயே அவரது வீட்டில் இறக்கி விடுகிறார். இந்த சூழலில் இருவருக்கும் ஒரு விதமான நட்பு ஏற்படுகிறது. இவர்களது நட்பு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் திரிகுண் பூர்ணாவிடம் நெருங்கி கட்டி அணைக்க முயல்கிறார். ஆனால் பூர்ணா அவரை தன்னிடம் நெருங்க விடாமல் உதறி தள்ளி விட்டு சென்று விடுகிறார்.

இந்நிலையில் பூர்ணா திரிகுண்ணிடம் ‘எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆகவே நான் யாரையும் காதலிக்கும் சூழ்நிலையில் இல்லை. இதனால் எனது வாழ்க்கை நாசமாகி போய்விடும்’ என்று திரி குண்ணிடம் எச்சரிக்கிறார். ஒரு சூழலில் பூர்ணா, தன் மீது திரிகுண் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து அவரை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரது கணவர் விதார்த் தன் தவறை உணர்ந்து பூர்ணாவிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு வரும்படி அழைக்கிறார். பூர்ணாவும் தனது கணவர் செய்த தவறை மன்னித்து மீண்டும் இல்லற வாழ்க்கையை இருவரும் தொடங்குகின்றனர்.

ஆனால் திரிகுண் பூர்ணாவை மறக்க முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இரவில் பூர்ணா வீட்டிற்கு திரிகுண் வருகிறார். அப்போது பூர்ணா சில அறிவுரைகளை கூறி திருந்துமாறு திரிகுண்ணிடம் சொல்கிறார். அந்த சமயத்தில் பூர்ணாவின் கணவர் விதார்த் தனது அறைக்குள் இருந்து வெளியே வருகிறார்.  அங்கு தனது மனைவி பூர்ணாவிடம் திரிகுண் நெருங்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். இதில் விதார்த் இறந்து விடுகிறார். இதனால் அந்த வீட்டை விட்டு ஓடி விடுகிறார் திரிகுண். இதன் பிறகு பூர்ணாவின் வாழ்க்கை என்னானது? என்பதுதான் “டெவில்” படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடிக்கும் விதார்த் நீண்ட நேரம் கழித்து படத்தில் தலை காட்டினாலும், தனது நடிப்பில் குறை வைக்காமல் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து அசத்தி இருக்கிறார். ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். விதார்த்துக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரம் புதிதாக இருந்தாலும், அதை புரிதலோடு செய்து அனைவரது பாராட்டையும்  பெறுகிறார்.

கணவனின் அன்பு கிடைக்காத சோகத்தில் இருக்கும் போது, கணவரின் மறுபக்கத்தை நேரில் பார்த்தபோது ஏற்படும் உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்தின் பன்முகத்தன்மையும் ஆழத்தையும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார் பூர்ணா. கணவனால் பாதிக்கப்பட்ட பூர்ணா, அந்த சோகத்தை சிறப்பாக வெளிப்படுத்தி,  ஏக்கம், தவிப்பு, காதல், கோபம், பயம் என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாக கையாண்டு, படத்தின் பெரும்பகுதியை தன் தோள் மீது சுமந்து அனைவரையும். ஆச்சரியப்படுத்தி  நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

பார்த்தால்  நல்ல பிள்ளை போல் காட்சியளிக்கும் திரிகுண்,  பூர்ணாவை எப்படியாவது  அடைய வேண்டும் என்று எண்ணும்போது அவரை இந்த வில்லத்தனமான  கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானவர் என்றே சொல்லலாம். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான நபர் என்று நிரூபிக்கும் விதத்தில்  திரிகுண் நடித்திருப்பதைக் கண்டு கைத்தட்டல் கொடுக்கலாம்.

சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின் எதற்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது புரிய்வில்லை. மேலும் சில காட்சிகளை கொடுத்து முன்னுரிமை கொடுத்து நடிக்க வைத்து இருக்கலாம்.

இப்படத்தின் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் தனது அழகிய கோணத்தில் அனைவரின் கவனத்தை கதைக்குள் கவர்ந்து விட்டார். இரவு காட்சிகள் நன்றாக படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

இயக்குனர் மிஷ்கின் தன் குருநாதர் இளையராஜா மாதிரியே  இசை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து இருக்கிறார் என்றுதான்  சொல்ல வேண்டும். அவரது இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளது. பல இடங்களில் தனக்கு பிடித்த வயலின் இசையை சூப்பராக பயன்படுத்தி அசத்தி உள்ளார்.

த்ரில்லர், ஹாரர், கிரைம் ஜானர்களில் கலவையாக ஒரு பெண்ணை மையமாக வைத்து, ஹேமா என்ற கதாபாத்திரம் மூலம் கதையை சொல்லி இருக்கும் இயக்குனர் ஆதித்யா, படம் ஆரம்பத்திலிருந்தே பயத்தை காட்டி இயக்கி இருக்கிறார். ஒரு சில படங்களுக்கு இயக்குனர்கள் இரண்டு கிளைமாக்ஸ்களை எடுப்பது உண்டு.    கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இயக்குனர்  ஆதித்யா  ‘டெவில்’  படத்திற்கும் இரண்டு கிளைமாக்ஸ்  எடுத்திருப்பார் போல் தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சியை யாராலும்  புரிந்து கொள்ள முடியாமல் அனைவரையும் குழப்பத்தில் நெருட வைக்கிறது.  கிளைமாக்ஸ் காட்சியை அனைவருக்கும் புரியும்படி எடுத்து இருந்தால் படம் மாஸாக இருந்து இருக்கும்.

மொத்தத்தில், இந்த ‘டெவில்’  அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.

 

 

 

"DEVIL" MOVIE REVIEW NEWSFeatured
Comments (0)
Add Comment