பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்….”ரூட் நம்பர் 17” பட விழாவில் ஆரி வேதனை!

126

CHENNAI;

14 சர்வதேச விருதுகளை வென்ற ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரூட் நம்பர் 17’. இதில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியன் நடிக்க, ஹரிஷ் பெராடி வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருவி மதன், அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர். அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் மூலம் இரண்டு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வென்ற பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் அவுசப்பச்சன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். யுக்பாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரூட் நம்பர் 17’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா நெக்சஸ் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நடிகர் ஆரி இருவரும் இந்தப்படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி,

 

“இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்கு தான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.

ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன். அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது” என்றார்.
நாயகன் ஜித்தன் ரமேஷ் பேசுகையில்,

 

“நானும் அபிலாஷும் எப்போது ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது ’தாய்நிலம்’ என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். முதலில் கதையை சொல்லுங்கள் நல்லா இருக்கா இல்லையா என்று அப்புறம் சொல்லலாம் என்று கூறினேன். ஒரு மணி நேரம் கதை சொன்னார். ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் முடித்தபோது ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக கதை இருந்தது.  90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல இந்த படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என  நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது. இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவுசப்பச்சன் சாரின் கடின உழைப்பால் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகுமபோது நிச்சயம் பின்னணி இசை ஹிட் ஆகும்” என்றார்.

இசையமைப்பாளர் அவுசப்பச்சன் பேசுகையில்,

“திரையுலகில் எனது பொன்விழா ஆண்டில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன். நான் இருபது வயது வரை தான் முழுவதும் கேரளாவில் வாசித்தேன். எனது சினிமா பயணத்தை இங்கே சென்னையில் தான் துவங்கினேன். கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில் தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்டகிறார்கள். எனது 35வது வருட திரையுலக பயணத்தின் போதுதான் என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லோரும் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன்” என்றார்.