சென்னை:
இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குக் கதையை சசி அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளைக் கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
வடசென்னை பகுதியில் குத்து சண்டை வீரராக விளங்கிவரும் கார்த்திகேயன் சந்தானம், தான் வாழும் பகுதியில் உள்ள இளைஞர்களையும், மற்றும் பள்ளியில் பிடிக்கும் சிறுவர்களையும் விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து கால் பந்தாட்ட வீரர்களாக உருவாக்க பயிற்சி அளிக்கிறார். இந்நிலையில் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பி அவினாஷ் தனது நண்பன் சங்கர் தாசு உடன் இணைந்து அந்த ஏரியாவில் கஞ்சா விற்பதற்கு முயல்கிறார். இந்த விஷயம் அண்ணன் கார்த்திகேயன் சந்தானத்திற்கு தெரிய வர, தனது தம்பி அவினாஷை கண்டிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தனது வீட்டில் உள்ள தங்க செயினை அவினாஷ் திருடி கஞ்சா தொழிலுக்கு முதலீடு செய்து, சங்கர் தாசுடன் இணைந்து செயல்பட நினைக்கும் போது, அதனை கண்டு கோபம் அடைந்த கார்த்திகேயன் சந்தானம், அவினாஷையும், சங்கர் தாசையும் அடித்து நொறுக்கி கஞ்சா விற்பதை தடுக்கிறார். இதனால் கோபமுற்ற சங்கர் தாஸ் அவினாஷ் அண்ணன் கார்த்திகேயன் சந்தானத்தை கொன்றுவிடுகிறார். இந்த கொலைப் பழி தம்பி அவினாஷ் மீது விழுகிறது.
கொலைப்பழி சுமத்தப்பட்ட அவினாஷ் சிறைக்குச் செல்ல, மறுபக்கம் சங்கரதாஸ் அரசியலில் ஈடுபட்டு பெரிய அளவில் செல்வாக்கு ஏற்பட்டு அந்த பகுதியையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார். கால்பந்தாட்ட வீரராக உருவாக வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்த விஜயகுமார் இதனால் வேதனையுற்று என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார். அந்த சமயத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவினாஷ், விஜயகுமாரிடம் என் அண்ணனை கொன்றவன் சங்கர் தாஸ்தான் நான் கொலை செய்யவில்லை. ஆனால் கொலைப்பழி என் மீது விழுந்துவிட்டது.
ஆகவே நான் சொல்கின்ற மாதிரி நீங்களும், உங்கள் நண்பர்களும் செய்தால் உன்னை பெரிய கால்பந்தாட்ட வீரராக கொண்டு வருகிறேன்… என் அண்ணன் கார்த்திகேயன் சந்தானம் கனவை நினைவாக்குகிறேன் என்று விஜயகுமாரிடமும், மற்றும் அவர்களது நண்பர்களிடம் சங்கர் தாஸை கொல்ல திட்டமிகிறார் அவினாஷ். சங்கர்தாஸை கொலை செய்ய அவினாஷ் விரித்த வலையில் நாயகன் விஜயகுமார் சிக்கினாரா? விஜயகுமார் கால் பந்தாட்ட வீரராக உருவானாரா? இல்லையா? என்பதுதான் “ஃபைட் கிளப்” படத்தின் மீதி கதை.
’உறியடி’ படத்தில் கோபக்கார இளைஞராக நடித்து தமிழ்த்திரைக்கு அறிமுகமான விஜய்குமார், இதிலும் செல்வா என்ற கடுங்கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வடசென்னை இளைஞனாக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து இளைஞனாக, அந்த கதாபாத்திரத்திற்குத் தேவையான துடிப்பு, துடுக்குத்தனமான, முரட்டுத்தனத்தை படம் முழுவதும் யதார்த்தமாக வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
கதாநாயகி மோனிஷா மோகன் மேனன் பெரிதாக இந்த திரைப்படத்தில் வேலை இல்லை என்பதால் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சங்கர் தாஸ், குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் கதை நடக்கும் பழவேற்காடு கடற்கரை பகுதிகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு ஏற்றவாறு மிகுந்த பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார்ரகம்தான்.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ.ரஹமத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவியாளராகப் பணிபுரிந்துள்ள இவர் எடுத்துக் கொண்டுள்ள இந்த கதையை வடசென்னையில் நடக்கும் கோஷ்டி சண்டையை மையப்படுத்தி இயக்கியுள்ளார். பெரும்பாலான கதாபாத்திரங்கள் சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைப்பதும், மது அருந்துவதும் போன்ற காட்சிகளை ஓரளவு காட்டி கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். போதைப் பொருளால் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை மிக தெளிவாக காட்டியிருந்தாலும், அதிகமான வன்முறைக் காட்சிகளை அளவுக்கதிமாக புகுத்தி முகம் சுழிக்க வைத்திருப்பது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது. அதனால்தான் “ஃபைட் கிளப்” என்று தலைப்பு வைத்திருப்பது போல் தெரிகிறது.
மொத்தத்தில், ‘ஃபைட் கிளப்’ சண்டைப் பிரியர்கள் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.