CHENNAI:
வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மதிமாறன்” இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பார்வேஸ்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
கதையின் கதாநாயகன் சிறு வயதிலேயே வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு குள்ள மனிதனாக வலம் வரும் வெங்கட் செங்குட்டுவன், கதை ஆரம்பிக்கும்போதே தற்கொலைக்கு முயற்சிக்கிறான். கிணற்றில் குதித்த அவர் தண்ணீரில் தத்தளித்து இருக்கும் போது எந்த சூழலிலும் அக்காவை கைவிட கூடாது என்று இறந்து போன தன் தந்தை சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வரவே கிணற்றிலிருந்து வெளியேறுகிறார். கிராமத்தில் தபால்காரராக பணியாற்றுகிறார் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தான் வெங்கட் செங்குட்டுவன், மற்றொருவர் இவானா.
வெங்கட் செங்குட்டுவன் உயரத்தில் வளர்ச்சி குன்றி குள்ளமாக இருக்கிறார். அப்போது பலரும் அவரை குள்ளன் குட்டை லில்லிபுட் என்று. கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனால் வெங்கட் செங்குட்டுவன் எதை பற்றியும் கவலை படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் படித்து வரும் அவரது சகோதரி இவானா கல்லூரி பேராசிரியரின் காதல் வலையில் விழுந்து அவருடன் ஓடி விடுகிறார். இதனால் அவரது பெற்றோர் மனம் வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற தன் சகோதரி இவானாவை தேடி வெங்கட் செங்குட்டுவனும் சென்னை செல்கிறான். சென்னையில் வெங்கட் செங்குட்டுவனின் காதலி ஆராத்யா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரது உதவியுடன் தன் சகோதரி இருக்கும் விலாசத்தை கண்டுபிடித்து அங்கு செல்கிறான். சென்னையில் வந்து தங்கி இருந்தபோது இங்கு மர்மமான முறையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பல பெண்கள் காணாமல் போய் கொலை செய்யப்படுவதையும் கேள்விபடுகிறார். இந்த சூழலில் அப்போது சகோதரியின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண் மாயமானது குறித்து தெரிய வர, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யாவின் உதவியோடு அந்த பெண்ணை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இறுதியில் மர்ம கொலைகளின் பின்னணியில் நடந்தது என்ன? இந்தக் கொலைகளை செய்தது யார் என்பதை தனது காதலியுடன் சேர்ந்து கண்டுபிடித்தாரா? என்பதற்கு “மதிமாறன்” படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், முதல் படம் போல் அல்லாமல் ஒரு உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரும் பாராட்டுகின்ற அளவிற்கு மிரட்டி இருக்கிறார்.பள்ளியில் படிக்கும் போதும் சரி, கல்லூரியில் படிக்கும் போதும் சரி நெடுமாறன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முழு படத்தையும் தன் மீது சுமந்து உணர்ச்சிகரமான நடிப்பு, நடனம் என தன்னுடைய திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
லவ் டூடே படத்திற்கு பிறகு மிகவும் யதார்த்தமான நடிப்பை இப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார் நடிகை இவானா. குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் நம்மையும் கண் கலங்க வைத்து, சிறந்த முறையில் அனைவரையும் கவர்கின்ற அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார்.
வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், சிறந்த நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் மிக சிறப்பாக நேர்த்தியாக பயணித்திருக்கிறார்கள்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பர்வேஸ் ஒளிப்பதிவு படத்தின் கிரைம் சீனையும் ரசனை கெடாமலும், பயமுறுத்தலும் இல்லாமல் படமாக்கி.இருக்கிறது.
ஒரு மனிதனின் உருவத்தை பார்த்து யாரையும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்பதை அழுத்தமாக பல சிறப்பான வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லி உயிரோட்டமான கதை எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த வருட கடைசியில் “மதிமாறன்” என்ற ஒரு அருமையான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில், வழக்கமான பாணியில் படத்தை கொண்டு செல்லாமல் மாறுபட்ட முறையில் அனைத்து ரசிகர்களையும் கவரும் படம்தான் “மதிமாறன்”
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.