’கருடன்’ திரைப்பட விமர்சனம்

97

தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி ஆர்.வி.உதயகுமார். இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி வடிவுக்கரசி குடும்பம்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி – கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் திரை தோற்றம் மற்றும் நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. நிச்சயம் அவரை தொடர்ந்து நடிகராக பார்க்கலாம்.

ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா புழுதி நிறைந்த பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சிகளை ஆக்ரோஷமாக மட்டும் இன்றி இயல்பாகவும் படமாக்கி பார்வையாளர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. சூரியால் இது சாத்தியமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடம் சிறுதுளி கூட ஏற்படவில்லை, இதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் அவரை படம் முழுவதும் காட்டிய விதம் தான்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளை மக்கள் மனதில் நிற்க வைத்துவிடுகிறது.

படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் முந்தைய காட்சியை தொகுத்த விதம் படத்தை விறுவிறுப்பாக மட்டும் இன்றி, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

’விடுதலை’ படத்தின் மூலம் காமெடி நடிகரையும் தாண்டி அழுத்தமான நடிகராக உயரத்திற்கு சென்ற சூரியை மேலும் உயரத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், படத்தை நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

மண், பெண், பொன் இவை மூன்றும் தான் மனிதர்களிடையே போட்டியை ஏற்படுத்தும் என்பதை, விஸ்வாசம் மற்றும் துரோகம் ஆகியவற்றுடன் இணைத்து நல்ல கதையம்சம் கொண்ட படமாக மட்டும் இன்றி  மாஸான ஆக்‌ஷன் படமாகவும் கொடுத்து சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.