டென் ஹவர்ஸ் – விமர்சனம் 3.5/5

இளையராஜா கலியபெருமாள் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டென் ஹவர்ஸ்.
பெண் கடத்தல் மற்றும் பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், இரண்டு குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘டென் ஹவர்ஸ்’.
பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை துவங்குகிறார் சிபிராஜ்.
இறுதியில் கொலையை செய்தது யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
அளவு எடுத்தாற் போல் தாடி, கழுத்தில் சாமி மாலை, நெற்றியில் விபூதி பட்டை, ஆறடி உயரம் என இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை போகிற போக்கில் நடித்துவிட்டுச் சென்றது போன்று மிகவும் இயல்பாக நடித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சிபிராஜ்.
கதை முழுவதும் இரவில் நடந்தாலும், இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக், பேருந்து பயணம், தேசிய நெடுஞ்சாலை என அனைத்து காட்சிகளையும் குறைவான வெளிச்சத்தில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆரம்பத்திலேயே திரைக்கதையோடு பார்வையாளர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறது. கதைக்களத்தின் தீமாக ஒலிக்கும் பீஜியமும் கவனம் ஈர்க்கிறது.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், காட்சிகளை தொகுத்த விதம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்வதோடு, யார் குற்றவாளி?, இரண்டு குற்றங்களுக்கு இடையே எதாவது தொடர்பு இருக்குமா? என்ற கேள்விகளுக்கான பதிலை யூகிக்க முடியாதபடி இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றால் இப்படி இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு படம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
மொத்தத்தில், ‘டென் ஹவர்ஸ்’ நேரம் போவதே தெரியாது.
ரேட்டிங் 3.5/5