’ஹபீபி’ திரைப்பட விமர்சனம்

21

ஹபீபி’ திரைப்பட விமர்சனம்…

தென் தமிழக குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை குடும்ப தலைவரான கஸ்தூரிராஜா நெசவுத் தொழிலை நம்பியிருக்கிறார்..

அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே அவரது மகன் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், அவரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளி காதலி மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும் கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

பதற்றமும், பரபரப்பும் இன்றி அதிகம் சத்தமில்லாமல் பயணித்து காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

 

 

80-காலக்கட்டத்தில் இருக்கும் வீடுகள், இஸ்லாமிய வழிபாட்டு தளங்கள், மக்களின் ஆடை ஆகியவற்றை மிக நுணுக்கமாக கையாண்டுள்ள கலை இயக்குநர் அப்புனி சஜன், ஒவ்வொரு காலக்கட்டத்தின் மாற்றங்களையும் மிக தத்ரூபமாக திரையில் வெளிக்காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார்.

 

உணர்வுப்பூர்வமான கதை என்றாலும் பல காட்சிகள் சற்று நீளமாக இருப்பதை படத்தொகுப்பாளர் மதி.வி.எஸ் தவிர்த்திருக்கலாம். இஸ்லாமியர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மக்களிடம் அழுத்தமாக பதிய வைப்பதற்கான முயற்சியாக இருந்தாலும், அதை பல காட்சிகளில் கையாண்டிருப்பது திரைக்கதையின் வேகத்தை குறைத்து விடுகிறது.

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியலையும், அவர்களது கலாச்சாரம் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் பொருளாதா ஏற்றம், இறக்கங்களை உண்மைக்கு நெருக்கமாக தன் கதையில் பேசியிருக்கும் வி.எஸ்.முகமது அமீன், வெளிநாட்டு வேலை மூலம் பெரும் பொருளாதாரம் ஈட்டினாலும், அதற்கான அவர்களது இழப்பீடு என்பது திரும்ப பெற முடியாத ஒன்று, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் மீரா கதிரவன், மூன்று தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்கை சூழலை காட்சி மொழியில் மிக இயல்பாக கொடுத்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிக சரியான முறையில் பேசியிருந்தாலும், பொருளாதாரம் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதையும் புரிய வைத்திருக்கிறார்.

 

வசனங்கள் மூலம் பலரது வலியை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன், வழக்கமான திரைக்கதை பாணியில் கதை சொன்னாலும், மக்களிடம் தான் கொண்டு சேர்க்க நினைத்ததை மிக சரியாக செய்திருக்கிறார். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பது போல், இஸ்லாமியர்களுக்கு அவர்களது வாழ்வியலை திரையில் பார்த்த பெரும் திருப்தியை கொடுக்கும்.

ஹபீபி’ அன்புக்குரியவர்களுக்கான படம்.

ரேட்டிங் 4/5