‘அன்பில் அவன்’ திரைப்பட விமர்சனம்

‘அன்பில் அவன்’ திரைப்பட விமர்சனம்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் தம்பதி நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார்கள். பிரீத்தி முகுந்தன் படிக்கும் காலத்தில் இருந்தே, சொந்தமாக விருந்தோம்பல் இல்லம் (Home Stay) ஒன்றை தொடங்குவதை கனவாக கொண்டிருக்கிறார். தனக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்த தன் காதல் மனைவியின் கனவை நினைவாக்க அசோக் செல்வன் முடிவு செய்கிறார்

கல்லூரிப் பருவத்தில் காதல், மோதல் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் எதார்த்தை புரிந்து பொறுப்புணர்வுடன் வாழும் கதாபாத்திரத்தை அசோக் செல்வன் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். மனைவியின் கனவை நினைவாக்கும் முயற்சியில் ஏற்பட்ட பிரச்சனை, அதை சரி செய்யும் முயற்சியில் ஏற்படும் அடுத்தடுத்த சிக்கல்களால் தவிப்பு, என்று பல்வேறு உணர்வுகளை சிறப்பாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். கல்லூரி மாணவராக இருக்கும் போது அசோக் செல்வனின் கெட்டப் செம ஸ்டைலிஷாக இருக்கிறது. அந்த கெட்டப்பில் ஒரு முழுமையான ஆக்‌ஷன் படம் பண்ணலாம்.

பிரீத்தி முகுந்தன் அழகு பொம்மையாக மட்டும் அல்லாமல் உணர்ச்சிகரமாக நடிக்க கூடியவராகவும் தன்னை நிரூபித்திருகிறார். கணவருடான காதல், சிறு சிறு மோதல்களின் போது அவர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு காட்சிகளுக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசமத், ராணி பத்மினியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரேவதி ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், படத்தை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, இரண்டாம் பாதியின் பெரும் போராட்டத்தையும், அதில் இருக்கும் பதட்டத்தையும் பார்வையாளர்கள் கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் மன போராட்டங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.

காதல் மற்றும் ஆக்‌ஷன் என இரண்டு விதமான உணர்வுகளை காட்சிகளில் நேர்த்தியாக கடத்தியிருக்கும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, தன்னால் முடிந்தவரை படத்தை தொய்வின்றி நகர்த்த முயற்சித்திருக்கிறார்.

ஒரு சம்பவத்தை மையமாக வைத்து விக்னேஷ் ராஜா எழுதியிருக்கும் கதைக்கு, திரைக்கதை எழுதியிருக்கும் விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன் கூட்டணி, கடினமான சூழலில் இருந்து தப்பித்து வாழ்வதற்காக பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் இளம் தம்பதியின் காதலை அழகாக சொல்வதோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையையும், அதில் இருந்து அவர்கள் தப்பிப்பார்களா? இல்லையா ? என்பதை பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

வழக்கமான காதல் மற்றும் ஆக்‌ஷன் படம் என்றாலும் அதை புத்திசாலித்தனமான முறையில் சொல்லாமல், நீளமான ஆக்‌ஷன் காட்சியோடு சொல்லி சொதப்பியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்.

முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளும், கணவன் – மனைவி கெமிஸ்ட்ரி காட்சிகள் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் தொடங்கும் கதையும், அதை படமாக்கிய விதமும் அதர பழசாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் அந்த முக்கியமான ஆக்‌ஷன் காட்சியின் நீளமும், நம்பகத்தன்மை இல்லாததும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

சாதாரண கதை, சாதாரணமான திரைக்கதை, கணிக்கக்கூடிய காட்சிகள் ஆகியவற்றால் படம் தொய்வடைந்தாலும், அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இடையிலான காதல் மற்றும் மோதல்கள் படத்தை சற்று ரசிக்க வைக்கிறது.

Comments (0)
Add Comment