ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ஜோதிகா பேசுகையில், ” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.
என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.
இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘ காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.
பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது.
இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், ” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்