“சில நொடிகளில்” திரைப்பட விமர்சனம்!

100

சென்னை:

லண்டனில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருக்கும் பிரபல புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ரிஷி. இவரது மனைவியான புன்னகை பூ  கீதா சமூக செயல்பாட்டாளராக எப்போதும் தனது நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை ஏதும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு ரகசிய உறவு வைத்திருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி. ஒரு நாள் தன் மனைவி புன்னகை பூ கீதா வீட்டில் இல்லாத நேரத்தில் தன் கள்ளக்காதலியான யாஷிகா ஆனந்தை வீட்டிற்கு வரவழைக்கிறார்.   இருவரும் போதையில் உல்லாசமாக இருந்தபோது மனைவி புன்னகை பூ கீதா வீட்டுக்கு வருகிறேன் என்று தொலைபேசியில் சொன்னவுடன் அவசர அவசரமாக கள்ளக்காதலியை வெளியே அனுப்ப முயல்கிறார் ரிச்சர்ட் ரிஷி.

ஆனால் அளவுக்கு அதிகமான போதையினால் மயங்கி விழுந்த யாஷிகா ஆனந்த் இறந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த ரிச்சர்ட்ரிஷி , யாஷிகா ஆனந்தின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் ஒரு காட்டு பகுதியில்  குழி தோண்டி புதைத்து விடுகிறார். இதனால் குற்ற உணர்வுடன் தவித்துக் கொண்டிருந்த ரிச்சர்ட் ரிஷி, தன் மனைவியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். யாஷிகா ஆனந்த் இறந்து போன விஷயம் அவரது தோழிக்கு தெரிய வர அவர் ரிச்சர்ட் ரிஷியை பிளாக்மெயில் செய்து அடிக்கடி மிரட்டி பணம் பறிக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் ஆளாகும் ரிச்சர்டு ரிஷி யாஷிகா ஆனந்தின் தோழியிடம் இருந்து தப்பித்தாரா?  அவரது மனைவிக்கு யாஷிகா ஆனந்த் இறந்த விஷயம் தெரிந்ததா? என்பதுதான் “சில நொடிகளில்”  படத்தின் மீதி கதை.

லண்டனில் வசிக்கும் மருத்துவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் ரிச்சர்ட் ரிஷி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, தன்னை கனகச்சிதமாகப் பொருத்திக் கொண்டு, இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பயம் கலந்த குற்றவுணர்ச்சியுடன் மனைவியிடம் உண்மையை சொல்ல முடியாத இயலாமையை வெளிப்படுத்தக் கூடிய பலமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார் ரிச்சர்ட் ரிஷி.

யாஷிகா ஆனந்த் மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு ஏற்ப கவர்ச்சியாக நடித்திருந்தாலும், தன் உடலில் மட்டும் இன்றி தனது வார்த்தைகளிலும் கவர்ச்சியை வெளிப்படுத்தி, கள்ளக்காதலிகதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.

புன்னகைப் பூ கீதா, தனது கதாபாத்திரத்துக்கு முடிந்தவரை அதன் தன்மையை உணர்ந்து நியாயம்  செய்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லாத கணவனுடன் சண்டை, ஆட்டம் பாட்டம் என்று துணை கதாபாத்திரம் போல் வந்தாலும், இரண்டாம் பாதியில் தனது இன்னொரு முகத்தை காட்டும் போது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

கதாநாயகனை பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டும் ரேவதி பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் வரும் பெண், தனது மிரட்டலான பார்வையாலும், வில்லத்தனமான்  முகபாவனையாலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

அபிமன்யு சதானந்தனின் ஒளிப்பதிவு லண்டன் அழகை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். கதையின் தேவையை மீறாமல், லண்டன் நகரத்தின் இயற்கை எழில் மிகுந்த அழகை அள்ளிக்கொண்டு வந்திருப்பதோடு, அங்கேயே நாமும் வசிப்பது போன்ற உணர்வை நம் கன் முன்னே காட்டி  அசத்தியிருக்கிறார்.

மசாலா காஃபி, பிஜோன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஐந்து பேரின் பாடல்களும் இனிமையாக இருக்கிறது.  பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

தற்போது மனைவி இருந்தாலும் சிலர் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் கஷ்டங்களை தனது திரைகதை மூலம் தொடர்ந்து நடக்கும் ஒரு இறப்பும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும் சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும் இயக்குநர் வினய் பரத்வாஜ்,  இறுதியில் கள்ளக்காதலில் ஈடுபடும் கணவன்களுக்கு பய உணர்வை கொடுத்து படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘சில நிமிடங்களில்’ படத்தை கண்டு ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.