’வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்

94

கதாநாயகனாக நடித்தாலும் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்திருக்கும் சதீஷ், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கதாநாயகன் என்றாலும் ஜோடி, டூயட், ஆக்‌ஷன் என்று தன்னை முன்னிலைப்படுத்தாமல், கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குப்தா, கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், காட்சிகளில் முக்கியத்தும் இன்றி இருக்கிறார்.  சில காட்சிகளில் மட்டும் வரும் தாரணி கவனம் ஈர்க்கிறார்.

ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ், ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஆனந்தராஜ் செய்யும் காமெடிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. வில்லதனத்தோடு மதுசூதன ராவ் கோபமாக இருந்தாலும், அவருடன் இருக்கும் சாம்ஸ் செய்யும் அட்டகாசங்கள் சிரிப்பு சரவெடி என்றால், சுப்பிரமணிய சிவா மற்றும் டீமின் காமெடி காட்சிகள் சில இடங்களில் புஷ்பானமாக இருந்தாலும் பல இடங்களில் ஆட்டோபாமாக வெடிக்கிறது.

இசையமைப்பாளர் வி.பி.ஆர் மற்றும் ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக்  ஆகியோரது பணி படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் அருள் இளங்கோ சித்தார்த், எந்தவித குழப்பமும் இன்றி, திருட்டு சம்பவங்களை மிக சுவாரஸ்யமாக தொகுத்து படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைத்திருக்கிறார்.

விமான நிலையத்தில் நடைபெறும் கொள்ளை சம்பவம் லாஜிக் இல்லாமல் இருந்தாலும், அந்த இடத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் மூலம் காமெடி திருவிழாவை நடத்தி லாஜிக் ஓட்டைகளை மறைத்துவிடும் இயக்குநர் வெங்கி, மக்களை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.