‘PT சார்’ திரைப்பட விமர்சனம்.

79

 

“PT சார் ” Dr. ஐசரி K கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா.இந்த படத்தில் காஷ்மீரா பர்தேசி, தியாகராஜன், K.பாக்யராஜ், இளையதிலகம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர் …

சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT வாத்தியாராக பணிபுரிபவர் தான்  ஹிப் ஹாப் ஆதி.

ஆதி, எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என நினைப்பவர். அதற்கு காரணம் அவரது அம்மா தேவதர்ஷினி, ஜாதகத்தை நம்பியதுதான்.

இந்த சமயத்தில் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதே “PT சார்” படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வழக்கம் போல் குழந்தைகளையும், பெண்களையும் ஈர்க்கும் விதத்தில் கலகலப்பாக நடித்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழும் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, எங்கு பேச வேண்டுமோ அங்கு மட்டுமே பேசி மற்ற இடங்களில் அடக்கிவாசித்து அப்ளாஷ் பெறுகிறார்.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் காட்டிய விதம் அருமை. Sexual Harassment என்பது ஒரு சிறு குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை, எந்த அளவிற்கு பெண்களை பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலமாக நிரூபித்து விட்டார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தன் இருப்பை வெளிக்காட்டும் விதத்தில் வந்து போகிறார்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது.

 

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், அதை சமூகம் எப்படி பார்க்கிறது, என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 5 வயது சிறுமி முதல் 50 வயது பெண்கள் வரை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனையை, சக மனிதர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அதற்கான தீர்வை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், படம் பார்க்கும் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

 

முதல்பாதி படம் வேகமாக பயணித்தது போல், இரண்டாம் பாதி படம் பயணிக்கவில்லை என்பது சற்று குறையாக தெரிந்தாலும், இடைவேளைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் திருப்பம் அந்த குறையை மறக்கடிக்கச் செய்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு புதிய கோணத்தில் குரல் கொடுத்த படமாக கொண்டாட வைத்துவிடுகிறது.

‘PT சார்’ விளையாட்டுப் பிள்ளை இல்லை…