விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும்’விடுதலை – பாகம் 2
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், புவனா ஸ்ரீ, வின்செண்ட் அசோகன், சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் இப்பத்தில் நடித்துள்ளனர் முதல் பாகத்தில் தோன்றிய நடிகர்கள் அனைவரும் இப்படத்திலும் தோன்றியிருக்கின்றனர்…
பெருமாள் என்ற கதாபாத்திரத்தில், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் தொடங்கி, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களோடு பயணித்து கவனம் ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதி, காதலர் மற்றும் கணவராகவும் தனது இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்.
காட்டு வழிப் பாதையில் இவர்களது பயணம் தொடங்குகிறது. தான் எப்படி மக்கள் தலைவனானேன் என்று உடன் வரும் போலீஸாரிடம் கூறுகிறார் விஜய் சேதுபதி.
கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. ஜமீன் தாரர்களும் பெரும் செல்வந்தர்களும் ஊரை ஆண்ட காலம் அது. கூலி வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு பணிவிடை முதற்கொண்டு அனைத்து வேலையையும் செய்து வருகின்றனர். இதை எதிர்த்து அந்த ஊரில் உள்ள கருப்பு (கென்) கேள்வியெழுப்புகிறார். அங்குள்ள பாடசாலைக்கு வாத்தியாராக இருக்கிறார் விஜய் சேதுபதி. மிகவும் நேர்மையாகவும் எதையும் சட்டப்படி செய்ய வேண்டும் என்றெண்ணுபவர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கவர்ந்தாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு சற்று வேகத்தடையாகவே இருக்கிறது. ஆனால், அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது. காதல் காட்சிகளில் நம்மை இதமாக வருடிச் செல்லும் ராஜா, போராட்டக்களம் மற்றும் சண்டைக்காட்சிகளில் பீஜியம் மூலம் தெறிக்க விடுகிறார்.
கலை இயக்குநர் ஜாக்கி, சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள் பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.
மேலும் படத்தில் நடித்திருந்த, தமிழ், இளவரசு, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், கிஷோர், என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறி கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
வெற்றிமாறனின் பட்டறையில் தீட்டப்பட்ட கென் கருணாஸின் நடிப்பு என்பது நடிப்பின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். சேற்றில் கென் கருணாஸின் சண்டைக் காட்சி பிரமிக்க வைத்தது.
படத்தின் பலமே வசனம் தான் என்று கூற வைத்துவிட்டார் வெற்றிமாறன். அந்த காலத்தில் நடந்த அரசியல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடிய திராவிட, கம்யூனிச கட்சிகளின் பெருமையை அழுத்தமாக கூறியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த காட்சிகளை காணும் போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றில்சில மாற்றத்தை கொடுக்கலாம். ஆனால், உண்மையை யாராலுமே மறைக்க முடியாதே அதையே வெற்றிமாறனும் எடுத்துரைத்திருக்கிறார்.
அனைத்து கேரக்டர்களும் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருப்பதில் வெற்றிமாறனின் பங்கு அதிகமாகவே தெரிகிறது. பல வருடங்களுக்குப் பின், விடுதலை படத்தினை பார்க்கும் மனிதர்களுக்கு நமது முன்னோர்களின் வலியும் வேதனையும் அதற்காக அவர்கள் கண்ட முடிவுகளும் என கண்முன்னே படைக்க இப்படைப்பு ஒரு வரலாறாக இருக்கும். இது ஒரு பாடம் என்று தான் சொல்ல வேண்டும்.
இளையராஜாவின் பாடல் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட நிலையில், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும்பலம் தான். மேலும், வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை நம் முன்னால் நடப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார்.