‘கேங்கர்ஸ்’ திரைப்பட விமர்சனம் 3.5/5

65

ஊர் பெரிய மனிதர்களான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது செயல்களால் பள்ளியும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவிகள் சிலர் மாயமாகும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், அங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஆசிரியை கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் அனுப்புகிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை அனுப்புகிறது.

அதன்படி, உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் கோஷ்டியை வதம் செய்ய, அவர் தான் அந்த ரகசிய காவல்துறை அதிகாரி என்று கேத்ரின் நினைக்கிறார். ஆனால், சுந்தர்.சி  காவல்துறை அதிகாரி அல்ல, என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர்.சி யார்?, அவர் எதற்காக வில்லன் கோஷ்டியை வதம் செய்கிறார்?  என்பதை சிரிப்பு சரவெடியாகவும், எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலமாகவும் சொல்வதே ‘கேங்கர்ஸ்’.

ஆரம்பத்தில் அக்கதாபாத்திரம் நமக்கு சற்று சோதனை கொடுத்தாலும், காட்சி நகர நகர சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் தன்னை அர்ப்பணித்து படம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களிலும் காமெடி கண்ணீரை வரவழைத்துவிட்டார் வடிவேலு.

அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் மிஷன் 1, 2, 3 என்று செல்லும் ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து வயிறு குலுங்க வைத்துவிட்டார் வடிவேலு. குறிப்பாக சிறுவர்களையும் சிறுமிகளையும் வெகுவாகவே கவர்ந்து சென்றிருக்கிறார் வடிவேலு.

சுந்தர் சி – வடிவேலு காம்போவில் இப்படமும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. கிலுகிலுப்புக்கும் அழகுக்கும் நடிப்புக்கும் எந்தவிதத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

குப்பன் பாடலுக்கு நம்மையும் சேர்த்து ஆட்டம் போட வைத்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

பக்ஸ், காளை, முனீஸ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் காமெடிகளும் ரசிக்கும் படியாக இருந்தது. வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், மற்றும் ஹரீஷ் பெராடி உள்ளிட்டவர்கள் அதிரடி காட்டியிருக்கின்றனர்.

படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும்தங்களது வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் காமெடிக்கென்று இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றியது மட்டுமல்லாமல், சண்டைக் காட்சியையும் சற்று குறைத்திருக்கலாமோ என்றும் தோன்ற வைத்துவிட்டார்.

முதல் பாதியில் இருந்ததை விட, இரண்டாம் பாதி நம்மை அதிகமாகவே சிரிக்க வைத்துவிட்டா இயக்குனர் சுந்தர் சி.

பல வருடங்களுக்கு முன் பார்த்த வைகைப்புயலை மீண்டும் திரையில் அதே எனர்ஜியோடும் நகைச்சுவைத் தன்மையோடும் பார்த்ததில் ரசிகர்கள் அனைவருக்கும் கூடுதல் மகிழ்ச்சி தான்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். சத்யாவின் இசையில் ஒரு பாடல் ஆட்டம் போட வைத்தாலும், பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணத்தை வரவைத்துவிட்டார்.

லாஜிக் பார்க்காமல், இரண்டரை மணி நேரம் குடும்பத்தோடு திரையில் எந்த கவலையுமின்று சிரித்து மகிழ வேண்டுமா கண்டிப்பாக கேங்கர்ஸ் படத்திற்கு ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.

மொத்தத்தில், ‘கேங்கர்ஸ்’ சிரிக்காதவர்களையும் சிரிக்க வைப்பாங்க.