‘எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம். 4/5

95

‘எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம்..

கட்டுப்பாடு மிக்க அந்த குடும்ப நபர்களை கவர்வதற்காக தனக்கு தெரியாத பல்வேறு விசயங்களை செய்து நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார் சமந்தா.காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, தன்னால் பிரிந்த தன் கணவர் குடும்பத்தை சமாதானப்படுத்துவதற்காக அவருடன் ஊருக்கு வருகிறார்.

இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா, தப்பித்து சமந்தாவை தேடி வருகிறார். சமந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கும் அவர், அதற்கு சம்மதிக்கவில்லை என்றால், மொத்த குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டுகிறார். தன் கணவர் குடும்பத்தை ஆபத்தில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடும் சமந்தா, அதில் வெற்றி பெற்றாரா?, அவரது உண்மையான பின்னணி என்ன ? என்பதை அமர்க்களமான ஆக்‌ஷனோடு சொல்வது தான் ‘எங்கள் தங்கம்’.

பூ போல் அமைதியாக அறிமுகமாகும் சமந்தா, தன்னையும், தன் கணவர் குடும்பத்தையும் தாக்க வருபவர்களை எதிர்த்து நிற்கும் காட்சிகளில் புயலாக மாறி ஆக்‌ஷனில் அசத்துகிறார். தன் அழகான சிரிப்பு மற்றும் குறும்புத்தனமான நடிப்பு ஆகியவற்றை கடந்து ஆண்மைத்தனம் மிக்க நடை மற்றும் உடல்மொழி மூலம் மிரட்டுகிறார். குறிப்பாக, ஆக்‌ஷன் மற்றும் துப்பாக்கி சூடு காட்சிகளை பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் கையாண்டிருக்கும் சமந்தா, புடவை கட்டிய பூலான்தேவியாக வலம் வந்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கும் நடிக என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, பெரிய அளவில் மிரட்டவில்லை என்றாலும், சமந்தா யார் ? என்ற உண்மையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து திரைக்கதை பயணத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சமந்தாவின் கோபமான முகத்தையும், மாஸான நடிப்பையும் சரியான அளவில் பார்வையாளர்களிடம் கடத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் சையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் வெளியான சாதாரண ஆக்‌ஷன் கமர்ஷியல் மாஸ் கதை தான் என்றாலும், அதை குடும்பத்துடன் பார்க்கும்படியான மற்றும் பெண்களுக்கு பிடிக்கும் வகையிலான ஒரு கதையாக கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி கொடுத்திருக்கிறார்கள். இவர்களது கதைக்கு திரைக்கதை அமைத்திருக்கும் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

சமந்தா ஏற்கனவே பல படங்களில் ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தாலும், இதில் அவரை வேறு ஒரு பரிணாமத்தில் ஆக்‌ஷன் நாயகியாக கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.

சிறந்த மருமகளாக வேண்டும் என்பதற்காக சமந்தா செய்யும் குறும்புத்தனமான மோசடிகள் மற்றும் மருமகள்களுக்கு இடையே நிலவும் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் கலகலப்பை கலரவமாக மாற்றினாலும், அங்கேயும் குடும்பத்தாரை இணைத்து ஒரு முழுமையான குடும்ப ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தி விடுகிறார்.