“ ரூட் நம்பர் 17”  திரைப்பட விமர்சனம்!

CHENNAI:

நேநி என்டர்டெயின் மென்ட் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில்  ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஓன்டியா, ஹரிஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிபர், மாஸ்டர் நிஹால், டிட்டுஸ் ஆப்ரகாம், பெரோலிக் ஜார்ஜ்,  அகில் பிரபாகர் ஆகியோர் நடித்திருக்கும் படம்தான் “ ரூட் நம்பர் 17”  \

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

ஒரு முன்னாள் அமைச்சர் மகனான அகில் பிரபாகரன் தன் காதலியை அழைத்துக் கொண்டு தனிமையில் இருவரும் ஒரு காட்டுப் பகுதியில் செல்கின்றனர். தங்களது காரில் அந்த காட்டுப்பகுதியில் செல்லும்போது திடீரென ஒரு மர்ம உருவம் அந்த காதலர்களை கடத்தி பூமிக்கு அடியில் தோண்டப்பட்ட  ஒரு பாதாள அறைக்குள் அடைத்து சித்திரவதை செய்கிறது. காணாமல் போன அகில் பிரபாகரன் ஒரு அமைச்சரின் மகன் என்பதால் அவரை காவல்துறையினர் தேடி காட்டுப்பகுதிக்கு வருகின்றனர். ஏற்கனவே அந்த காட்டுப்பகுதியில் பல மர்மமான சம்பவங்கள் நடந்திருப்பது காவல்துறைக்கு தெரிய வருகிறது. இதற்கிடையே காதல் ஜோடியை கடத்திய அந்த மர்ம ஆசாமி காதலனை கொன்று விட்டு அந்த காதலியை பயங்கரமாக சித்திரவதை செய்கிறான்.

இந்நிலையில் காவல்துறை ஆய்வாளர் அமர் இராமச்சந்திரன் அந்த காட்டுப்பகுதியில் மாட்டிக் கொண்டிருக்கும் காதல் ஜோடியை  எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிமையில் வருகிறார்.  அவரையும் அந்த மர்ம ஆசாமி கடத்தி பாதாள அறையில் போட்டு விடுகிறான். காட்டில் வாழும் மர்ம ஆசாமியான ஜித்தன் ரமேஷ் எதற்காக அவர்களை பூமிக்கு அடியில் உள்ள பாதாள அறைக்குள் தள்ளி கொடுமை செய்கிறார்?. மர்ம மனிதன் ஜித்தன் ரமேஷ் இந்த கொடுமைகளை செய்வதன் காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? என்பதுதான் “ ரூட் நம்பர் 17”  படத்தின் மீதி கதை.

ஜித்தன் ரமேஷ் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தலைகாட்டி வந்தாலும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் வில்லன்ப்ளஸ் ஆக்ஷன் ஹீரோவாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அதுவும் ஒரு சைக்கோவாக மிரட்டி நடிப்பில் அசத்தியுள்ளார். அதிகம் வசனம் பேசாமல் நடிப்பிலேயே பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

கதாநாயகியை கவர்ச்சி உடையில் பார்த்தால் சந்தோசம் வரவேண்டும் என்ற சூழலில்,  இப்பட நாயகி அஞ்சுவைப் பார்த்துப் பரிதாபப்பட வைத்திருக்கிறார்கள். காட்டிலும் சேற்றிலும் புரட்டி எடுத்தாலும் அதற்கேற்றவாறு நடிப்பில்  அசத்திருக்கிறார்.

காதல் ஜோடியாக நடித்திருக்கும் அகில் பிரபாகரன் சிறிது நேரம் வந்தாலும் அவரது நடிப்பு பேசப்படுகின்ற மாதிரி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் வேடத்தில் கச்சிதமாக இருக்கிறார் ஹரிஷ்பெராடி. காவல்துறை அதிகாரியாக வரும் அமர் இராமச்சந்திரன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். கான்ஸ்டபிளாக வரும் அருவிமதன் தனது நேர்த்தியான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

இசையமைப்பாளர் அவுசப்பச்சன், தனது இசையில் பாடல்கள் மூலம் மிகுந்த அனுபவஸ்தர் என்பதை காட்டியிருக்கிறார். கதைக்குத் தேவையான அளவு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம்  வனப்பகுதி மற்றும் பாதாள அறைக் காட்சிகளைப் படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

காட்டுப்பகுதியில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு வழக்கமான பாணியில் ஒரு படத்தை கொடுக்காமல், ஒரு சைக்கோ கதாபாத்திரத்தை முன்ணணியில் வைத்து இயக்கி இருக்கும் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், பயமுத்தும் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெடாமல் திரிலிங்கான  காட்சிகளை மிகவும் அருமையாக நகர்த்தி சென்றிருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘ரூட் நம்பர் 17’ படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.

"Route No-17" Movie ReviewFeatured
Comments (0)
Add Comment