’ஹேப்பி ராஜ்’ (Happy Raj) திரைப்பட விமர்சனம்.4.5/5

’ஹேப்பி ராஜ்’ (Happy Raj) திரைப்பட விமர்சனம்.4.5/5

வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பணக்காரரான ஸ்ரீ கெளரி பிரியாவின் தந்தை அப்பாஸ், மகள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திருமண ஏற்பாடுகள் தொடங்கும் போது ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றம் மற்றும் எதார்த்தமான செயல்களை பார்த்து கோபமடையும் அப்பாஸ், அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். உருவத்தை பார்த்து ஒருவரது தகுதியை தீர்மானிக்கும் அப்பாஸுக்கு, ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்டுகிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திருமணம் நின்று விடுகிறது.

திருமணம் நின்று போனதற்கு தனது தந்தை தான் காரணம் என்று நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அவரை வைத்தே தனது காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி நின்ற திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்வதே ‘ஹேப்பி ராஜ்’.

ஜி.வி.பிரகாஷ், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை ஹேப்பி மூடில் பயணிக்க வைத்தாலும், கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தனது அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார். நடனம், உடை, உருவம் என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இதுபோன்ற கதாபாத்திரம் பழக்கப்பட்டது என்றாலும், அப்பா மீதான கோபம் மற்றும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி பிரியாவுக்கு அதிக வேலையோ, அழுத்தமான கதாபாத்திரமோ இல்லை. நாயகனை காதலிப்பது, அவருடன் நடனம் ஆடுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார். நாயகனுக்கு இணையான மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சரியாக பொருந்தியிருக்கும் ஜார்ஜ் மரியன், தனது இயல்பான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்று விடுகிறார்.

மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் ஆகியோர் வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரி காதலி பிரார்த்தனா நாதன் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கி படத்தை பிரமாண்டமாக காண்பித்திருக்கிறது. குறிப்பாக கதாநாயகி மீது தனி கவனம் செலுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அவரை பளபளப்பாக காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே-வின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறது.

தந்தை – மகன் இடையிலான புரிதல் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை நகைச்சுவை பின்னணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், உருவ கேலிக்கு ஆளாகும் நபர்களின் மன வலி மற்றும் அதனை தாண்டிய அவர்களுக்கான மகிழ்ச்சியை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் ஹீரோ அப்பா என்று சொன்னாலும், அந்த அப்பாக்களையே அவமானமாக பார்க்கும் சில பிள்ளைகளுக்கு சாட்டையடி அறிவுரை சொல்லியிருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், அதை பாடம் சொல்வது போல் அல்லாமல், உணர்வுப்பூர்வமாகவும், கலகலப்பாகவும் சொல்லி அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ’ஹேப்பி ராஜ்’ மிகவும் ஹேப்பி ராஜ் 🥰4.5/5

Comments (0)
Add Comment