திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து விடுகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை நாயகன் விமல் மற்றும் நாயகி சாயாதேவி இணைந்து கொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. விமலும், சாயாதேவியும் எதற்காக கொலை செய்கிறார்கள்..
விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயாதேவியும் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.
கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் அதிகம் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் பேச்சு மூலம் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள், என்பது தான் பார்வையாளர்களுக்கு புரியவில்லை.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் நடித்திருப்பதால், தனது கேமராவுக்கு பெரிய வேலை கொடுக்கவில்லை. சில பருந்து கோணங்கள், ஊர் மக்கள் சண்டைப்போடுவதற்காகவே இருக்கும் ஒரு தெரு, சில வனப்பகுதிகள் என்று குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கேமரா திரும்ப திரும்ப பயணிக்கிறது.
படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பேசிக்கொண்டே இருப்பதால் படத்தொகுப்பாளர் புவனால் எந்த காட்சியிலும் பெரிதாக கத்திரி போட முடியவில்லை என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றவை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயர் அளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் பிரச்சார பாணியில் சொல்லியிருக்கிறார்.
இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களிடம் மத மோதல்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.